பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ‘போயிங் 777’ ரக விமானம், கடந்த 4-ந் தேதி இரவு 8 மணியளவில், வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. அந்த விமானம், லாகூர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டும். விமான நிலையத்தை நெருங்கியபோது, கனமழை பெய்து கொண்டிருந்தது. எனவே, தரை இறங்க முடியவில்லை. கனமழையாலும், குறைவான உயரத்தில் பறந்ததாலும் விமானி பாதையை தவற விட்டார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதானா போலீஸ் நிலையம் வழியாக விமானம் இந்திய வான்பகுதிக்குள் நுழைந்து விட்டது. பின்னர் மீண்டும் பாகிஸ்தான் வான்பகுதிக்குள் விமானம் நுழைந்தது.பாகிஸ்தான் விமானம், மொத்தம் 10 நிமிடம் இந்திய வான்பகுதியில் இருந்துள்ளது. 120 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது.