224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 வாரங்களாக காங்கிரஸ், பாஜக மதசார்பற்ற ஜனதாப தளம் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. 6 மணிக்கு பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்களும் 6 மணியுடன் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். அதன்பிறகு, நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரம் நிறைவு பெறுவதால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.