தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். இந்நிலையில் இன்று முதல் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அத்துடன் இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு – தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்நிலையில் கடலுக்கு சென்றுள்ள பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.