Skip to content
Home » நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

நாகையில் சூடாமணி விகாரம் பகுதியில் இந்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு..

சோழர்கள் காலத்தில் மிகப்பெரிய துறைமுக நகரமாக விளங்கி, சூடாமணி விகாரம் கட்டப்பட்டு புத்தமதத்தின் தலைமை பீடமாக நாகை மாவட்டம் இருந்ததாக வரலாறுகள் சொல்லப்படுகிறது. இதனிடையே நாகை நகரத்தில் தற்போது அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் சூடாமணி விகாரம் இருந்ததாகவும், அதில் ஆய்வு மேற்கொண்டு நாகை மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கீழடியில் முதன்முதலாக அகழாய்வு செய்து தமிழரின் மிகத் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய, இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நாகை மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

8 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள சூடாமணி விகாரம், புத்த விகாரம், இருந்ததாக சொல்லப்படும் பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து நீதிமன்ற மன்ற வளாகத்தில் உள்ள 115

ஆண்டுகள் பழமையான கடல் மட்டம் அளவிடும் கல், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கோட்டாட்சியர் அலுவலகம், கடற்கரை சாலையில் உள்ள தொன்மைவாய்ந்த அருங்காட்சியகம், உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள தொன்மையான கட்டிடங்கள், சோழர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்த ஆய்வில் முழுமையான தரவுகள் சேகரிக்கப்பட்டு, எவ்வளவு பழமையானது என்பது தெரியவரும். புத்த விகாரங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது, ஆனால் நாகையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகம் சோழர்கள் பயன்படுத்திய முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. நமது நாகரிகத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால் இதுபோன்ற அடையாள சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பௌத்த அடையாளங்களை தாங்கி நிற்க கூடிய நாகை மாவட்டத்தில் ஏற்கனவே மேற்கொண்ட அகழாய்வில் மீட்கப்பட்ட புத்த சிலைகளை மீண்டும் நாகை மாவட்டத்திற்கு கொண்டு வந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், பழைய நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சூடாமணி விகாரம் அமைந்துள்ள பகுதியை நாகை மாவட்டத்தின் அடையாள சின்னமாக மாற்ற வேண்டும், மக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என ஆய்வில் பங்கேற்ற நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சென்னை பல்கலைகழக பேராசிரியரும், தொல்லியல் ஆலோசகருமான சேரன், துணை தொல்லியல் கண்காணிப்பாளர் குமரன், உதவி தொல்லியலாளர் பிரசன்னா ஆகியோர் வருகைதந்துள்ள குழுவினர் நாகை மாவட்டத்தின் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *