Skip to content
Home » மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

மணிப்பூர் கலவரம்…. ரயில் , இணைய சேவை ரத்து

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டீஸ் என்ற பழங்குடி இனத்தைச் சேராத மக்கள், தங்களுக்கு எஸ்.டி. என்னும் பழங்குடி இன அந்தஸ்து வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.இவர்கள் மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் ஆகும். இவர்களுக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்க பழங்குடி இனத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், 4 வாரத்துக்குள் மெய்டீஸ் இன மக்களின் எஸ்.டி. அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மணிப்பூர் ஐகோர்ட்டு சமீபத்தில் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.  இந்த நிலையில் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நேற்று முன்தினம் நடந்தது.

இதில் சவுரசந்திரபூர் மாவட்டத்தில் டார்பங் பகுதியில் மாணவர் அமைப்பின் பேரணிக்கு போட்டியாக பழங்குடி இனத்தினர் அல்லாதோர் பேரணி நடந்தது. இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. வீடுகள், வாகனங்கள், கடைகள் தீயிட்டுக்கொள்ளுத்தப்பட்டன. இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வழிபாட்டுத்தலங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. தமிழர்கள் வாழும் மணிப்பூர்-மியான்மர் எல்லையில் மோரோ கிராமத்திலும் வன்முறை மூண்டது. 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சூரசந்த்பூர், காங்போக்பி, டெங்னவுபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் ராணுவமும், அசாம் ரைபிள் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை பாதித்த பகுதிகளில் இருந்து 7 ஆயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கலவரம் காரணமாக மணிப்பூருக்குள் எந்த ரெயில்களும் இயக்கப்படாது என்றும் அனைத்து ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கலவரம் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் வரை மணிப்பூருக்கு எந்த ரயிலும் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் இயக்கத்தை நிறுத்த மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!