திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நமது திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் திரிபு வேலைகளைச் செய்யக்கூடிய அரசியல் கட்சியினர், நம் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், உண்மையை உரக்கச் சொல்லவும், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் வதந்திகளையும் அவதூறுகளையும் முறியடிக்கவும் நாமும் காணொளி வாயிலாகப் பதில் தர வேண்டியுள்ளது.
கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து காலம் காலமாக அதன் மீது அவதூறுகளைப் பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருப்போர் இருக்கிறார்கள். கழகத்தைத் திட்டியே வயிறு வளர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். கழகத்தை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள். இன்று, நேற்றா இதைப் பார்க்கிறோம்? என்றுதான் இந்த வீண்பழிகளைக் கண்டு நாம் அஞ்சியிருக்கிறோம்? தி.மு.கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கு பேரறிஞர் அண்ணா தனது திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களில் பதிலளித்தார்.
அவரது காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்ட அவதூறுகளுக்கும் வதந்திகளுக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்பு கடிதங்களில் பதிலளித்தார். கழகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்கும், கழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கும் கடிதங்கள்தான் பயன்பட்டன. கால வளர்ச்சியின் காரணமாக இன்று காணொளிகள் வெளியிடப்பட்டாலும், கடிதத்தின் வாயிலாக கழகத் தொண்டர்களாம் – கலைஞரின் உடன்பிறப்புகளாம் உங்களுடன் உரையாடும்போது நெருக்கமான அன்பும் பாசமும் வெளிப்படுவது இயற்கைதானே! தி.மு.கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தின் உடன்பிறப்புகளல்லவா நாம்! அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை, நிறைவேற்றியிருக்கும் திட்டங்களை, இரண்டாண்டு காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் இதயத்தில் அவற்றைப் பதியச் செய்திடும் கடமை, உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது. அதனால்தான், திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
மே 7-ஆம் நாள் சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றுகிறேன். என்னுடன் கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு எம்.பி., பங்கேற்கிறார். கழகத்தின் பொதுச்செயலாளர்அமைச்சர் துரைமுருகன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோயில் கிழக்குப் பகுதியிலும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு , சேலம் மேற்கு மாவட்டம் தாரமங்கலம் நகரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி தேனி மாவட்டம் பெரியகுளம் நகரத்திலும், அமைச்சர் க.பொன்முடி கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், ஆ.ராசா எம்.பி.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும், .அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி.ஈரோடு தெற்கு மாவட்டம் கொடுமுடி வடக்கு ஒன்றியத்திலும், கவிஞர் கனிமொழி எம்.பி., அவர்கள் தூத்துக்குடியிலும், இளைஞர் அணிச் செயலாளர்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் உரையற்ற இருக்கிறார்கள்.
அதே நாளில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதுபோலவே மே 8, 9 ஆகிய நாட்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தொடர்கின்றன. இந்தச் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில், யார் யார் எங்கு உரையாற்றுகிறார்கள் என்ற விவரங்கள் முரசொலியில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு கூட்டம் நடத்தினோம் என்றில்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம் – நகரம் – பகுதி – பேரூர் என அனைத்து இடங்களிலும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது. இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.