தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் நாளை(5ம் தேதி) இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை கேரளத்தில் வௌியிடக்கூடாது என அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் அரசு உச்சநீதிமன்றம் வரை போய் தடை கேட்டது தடை கிடைக்கவில்லை. இந்த படம் கேரளத்தில் திரையிட்டால் மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு பிரச்னை ஏற்படும் என வாதிட்டது. இந்த படத்தை திரையிடக்கூடாது என கேரளத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசும் குரல் கொடுத்தது.
சென்சார்போர்டு அனுமதி அளித்த நிலையில் அதற்கு தடை விதிக்க முடியாது. நீங்கள் உங்கள் மாநிலத்தின் ஐகோர்ட்டை நாடுங்கள் என கூறி விட்டது உச்சநீதிமன்றம்.
கேரளத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ இளம் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி, அங்கிருந்து ஈராக், சிரியா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்து விடுகிறார்கள் என்பது தான் தி கேரளா ஸ்டோரியின் மையக்கருத்து. இது உண்மை சம்பவம் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அதா ஷர்மா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். சங்பரிவார் அமைப்பின் திட்டங்களை இந்த படம் ஊக்குவிக்கிறது என கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டுகிறது. கேரளாவை இழிவுபடுத்தும் சங்பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரலை திரைப்பட தயாரிப்பாளர்கள் ஊக்குவிப்பதாகவும்,இந்துத்துவ சதிக் கோட்பாட்டைப் பரப்புவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஷா, “நாங்கள் கூறுவது எதுவும் ஆதாரம் இல்லாமல் இருக்காது” என்றும், சென் நான்கு வருடங்கள் ஆய்வு செய்ததாகவும் கூறி உள்ளார்.
இந்த படம் தமிழகத்திலும் நாளை திரையிடப்படுகிறது என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், இந்த படம் தமிழகத்தில் திரையிட்டால் தமிழகத்தில் ஒரு சமூகத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு, பிரச்னை ஏற்படலாம் என உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது. எனவே இந்த படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.