நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவையும், தனக்கு எதிரான தேர்தல் வழக்கையும் ரத்து செய்யக்கோரி கனிமொழி தரப்பில் 2019-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு கடந்த மாதம் ஏப்ரல் 27ம் தேதி வந்த போது கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நிரந்தர கணக்கு எண என்பது இந்தியாவில் தான் உள்ளதே தவிர சிங்கப்பூரில் அல்ல. ஆவண உண்மை இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். எதிர்மனுதாரர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, திமுக எம்.பி கனிமொழியின் வெற்றி செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.