மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் மகன் கனிவண்ணன் ( 27), இவர் கேட்டரிங் படித்துவிட்டு சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் உப்பனாற்று கரையில் தனது இருசக்கர வாகனத்தின் அருகில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அப்பொழுது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கனிவண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கனிவண்ணனுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு மருத்துவர்கள் , கனிவண்ணன் உடலை பார்த்தபோதுஅவரது உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான தடயம் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் நிச்சயம் ஆன வாலிபர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் பெருமளவில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- மயிலாடுதுறை இடையே போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை பொறுப்பு எஸ்.பி ஜவகர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்,
கொலை நடந்த இடத்தைபார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்,விரைவில் குற்றவாளிகளை பிடிக்க 3 டிஎஸ்பி தலைமையில் 8 ஆய்வாளர்கள்,11 எஸ்.ஐகள் தலைமையில் தனிப்படை அமைத்து துப்புதுலக்கி வருகிறார்கள்.
சீர்காழி தாலுகாவில் விஐபிகள் தங்களது பாதுகாப்பிற்காக வைத்துள்ள துப்பாக்கிகளை போலீசார் கணக்கெடுப்பு செய்து அவர்களை நேரில் விசாரணைக்கு வரவழைத்துள்ளனர். இதில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கொலை செய்யப்பட்ட கனிவண்ணன் செல்போனையும் போலீசார் கைப்பற்றி, அதில் யார் யாருடன் கனிவண்ணன் தொடர்பில் இருந்தார் என்றும் விசாரிக்கிறார்கள். அந்த நம்பரில் பல பெண்களின் நம்பர்களும் இருப்பதால் அவர்களிடமும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.