புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்தர் கருவூரார் சன்னதி தனியாக உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் சித்தர் கருவூரார் அவதார திருநாளானது ஆலயத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கருவூரார் சித்தருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கருவூராருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத்தொடர்ந்து கருவூரார் சித்தருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரவு தேர்பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த தேர்பவனி விழாவை முன்னிட்டு திருத்தேரில் உற்சவர் கருவூரார் கொலுவிருக்க செய்தனர். வண்ண
மாலைகள் அணிவித்து, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு மேளதாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து மகா தீபாராதனை நடைபெற்ற பிறகு திருத்தேர் பவனி விழா துவங்கியது.
ஆலயத்தை சுற்றி திருத்தேர் திருவீதி உலா வந்த பிறகு மீண்டும் ஆலய மண்டபத்திற்கு வந்தடைந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர் கருவூராரை தரிசனம் செய்தனர்.