நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அக்பர் அலி திருவாரூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஆழியூர் பிரிவு சாலை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது
காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் ஒரு காரில் வந்த இரண்டு நபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதை பார்த்த காரில் வந்தவர்கள் நிறுத்தாமல் சென்றதால் போலீசார் மூவரும் தங்களிடமிருந்த மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு காரை பின் தொடர்ந்து 15 கிலோ மீட்டர் விரட்டி கொண்டு சென்றனர். அந்த கார் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பரவை தனியார் விடுதி முன்பு காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்த இருவரும் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அந்த காரை சோதனை செய்த போது 8 நீல நிற பிளாஸ்டிக் கேன்களில் (50 லிட்டர் அளவுள்ள) 400 லிட்டர் சாராயம் காரைக்கால் வாஞ்சூர் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை கைப்பற்றிய போலீசார் கார் மற்றும் 400 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் சாராயம் கடத்தி வந்து தப்பியோடிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.