தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் தொழிலாளர் தினமான இன்று திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
செயற்குழுவில் இக்கழகத்தின் மாநில தேர்தலை ஜூன் 4-ம் தேதி நடத்துவது எனவும், கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுப் பணியில் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள் எந்தவித விதிகளும் இன்றி நீண்ட நாட்கள் மாற்றுப் பணியிலேயயே இருப்பதை உடனடியாக இரத்து செய்து
இனிவரும் காலங்களில் நியமிக்கும் பொழுது அவர்களை ஒரு பருவத்திற்கு மட்டும் என மாற்றுப் பணி ஆணையிலேயே குறிப்பிட்டு நியமிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றிய நிலையில் அங்கு பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் பெற்றுத்தரும் பணிகளுக்காக அரசின் வேண்டுகோளை ஏற்று தற்காலிக பணியிடமாறுதலில் முதல்வர் பனி மூப்புப் பட்டியலில் இருந்த ஆசிரியர்கள் பொறுப்பு முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர். அக்கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் முதல்வர் பணியிடம் கிடைக்காதவர்கள் உடனடியாக அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த கல்லூரிகளுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகளுக்கு அரசாணை 5-இல் உள்ளவாறு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் மற்றும் UGC நெறிமுறைகளில் உள்ளவாறு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
புத்தொளி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளுக்கு டிசம்பர் 2022 வரை கால நீட்டிப்பு வழங்கி கல்லூரி ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் பணி மேம்பாடுகள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.