மத்திய பிரதேச மாநிலம் குணாவில் உள்ள சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் இருவர், மாணவர்களுடன் சாலையில் நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதையடுத்து மேற்கண்ட பேராசிரியர்களுக்கு எதிராக கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், ‘அரசு சட்டக் கல்லூரியின் சட்டத்துறை நிர்வாக அதிகாரியான துஷ்யந்த் கவுல், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை குமாரி ஷாலினி கவுசிக் ஆகியோர் ‘ரீல்ஸ்’களை உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் படமான பாட்ஷா படத்தின் பாடலை ரீல் செய்யும் போது இருவரும் சாலையில் குத்தாட்டம் போட்டு நடனமாடினர். அதனால் அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது’ என்றனர். இதுகுறித்து பேராசிரியை ஷாலினி கவுசிக் கூறுகையில், ‘கல்லூரி வளாகத்தில் நடனம் ஆடவில்லை. அங்கு ரீல்ஸ் எதுவும் எடுக்கவில்லை. டெல்லி பல்கலைக்கழகத்தில் இதுபோன்று ரீல்ஸ் எடுப்பது பொதுவான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்னை பொருத்தவரை ரீல்ஸ் எடுத்ததில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழித் திறன் குறைவாக இருப்பதால், இதுபோன்ற ரீல்ஸ்களை வெளியிடுவதால் அவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.