கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சக்தி நகரில் பல குடியிருப்புகள் உள்ளன. இதில் பாலக்காடு மாநிலத்தில் வருமானவரித் துறையின் துணை கமிஷ்னராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்ற நிலையில் இன்று காலை கண்ணனின் அண்டை வீட்டார்
கண்ணன் வீட்டின் கேட் திறக்கும் சத்தத்தை கேட்டுள்ளனர்.
ஊருக்கு சென்றவர்கள் அதற்குள் திரும்பி வந்துவிட்டார்களா என பக்கத்து வீட்டாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்துள்ளனர் ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் கண்ணனுக்கு போன் செய்து வீட்டிற்கு வந்து விட்டீர்களா என கேட்டுள்ளனர்.
ஆனால் கண்ணன் தாங்கள் வீட்டிற்கு வரவில்லை எனவும் உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்கும்படி கூறி உள்ளார்.
பிறகு வீட்டின் உள்ளே சென்று பக்கத்து வீட்டார் பார்த்த போது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோ திறக்கப்பட்டு துணிகள் களைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதனை கண்ணனுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கண்ணன் தொலைபேசி மூலம் வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். கண்ணன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் கொள்ளையில் ஈடுபட்டவன் போலீசில் பிடி படாமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளான். அதே போல் சிசிடிவியின் சிக்காமல் இருக்கவும் கோமராவை திருப்பி வைத்து திருடி சென்றுள்ளான்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன், வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை, உள்ளிட்டவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே
வருமானவரித்துறை அதிகாரி கண்ணனும் வீட்டிற்கு வந்து சுமார் 50 சவரன் நகை கொள்ளை போனதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போலிசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.