Skip to content
Home » சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா…. ஜனாதிபதி முர்மு பங்கேற்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) ஜனாதிபதி திரவுபதி முர்முவை டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து, சென்னை – கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.  முன்னதாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அறிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.  இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவினை ஒட்டியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

முதல்-அமைச்சரின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் மாதம் 5-ம் தேதி சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!