விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ஐ பெரியசாமி, மஸ்தான், உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு, மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, உள்ளிட்ட துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வேலைவாய்ப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது திட்டங்கள் செயலாக்கத்துக்கு ஏதுவாக இருக்கும். மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை விவசாயிகள் பயனடையும் வகையில் செயல்படுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம், பட்டா வழங்குதல் உள்ளிட்ட மக்களின் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும்.அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். களஆய்வின் நோக்கம் நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.