Skip to content

தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

அதிமுக ஆட்சியில் நிலப்பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூரில் உள்ள  வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2019ல் திருவாரூர் கோட்டாட்சியராக இருந்தவர்  முத்து மீனாட்சி. இவர் தற்போது கள்ளக்குறிச்சியில் உள்ள மாவட்ட  கூட்டுறவு சர்க்கரை ஆலையின்  மேலாண்மை இயக்குனராக(மாவட்ட வருவாய் அந்தஸ்து) இருக்கிறார்.  இன்று காலை திருவாரூர் டிஆர்டி கார்டனில் உள்ள முத்துமீனாட்சி வீட்டில்  திருவாரூர் மாவட்ட  விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக   சோதனை நடத்தினர்.

இதுபோல திருவாரூரில் உள்ள கிராம அதிகாரி  துர்காராணி, கிராம உதவியாளர் கார்த்தி ஆகியோரின் வீடுகளிலும்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சை மருத்துவ கல்லுரி சாலை  பாரதி நகரை சேர்ந்தவர் மணிமேகலை, இவர் மாவட்ட வருவாய் அதிகாரி யாக உள்ளார். இவரது கணவர் அழகிரிசாமியும் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களது மகள்  காவியா சார்பதிவாளராக இருக்கிறார்.

இவர்களது வீட்டிலும் இன்று காலை தஞ்சை விஜிலென்ஸ் போலீசார்  சோதனை நடத்தி வருகிறார்கள்.  மணிமேகலையும் நிலப்பட்டா  முறைகேடு புகாரில் சிக்கி உள்ளதால் அவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இதுபோல  திருநாகேஸ்வரம் அருகே  ஒரு தாசில்தார் வீட்டிலும் சோதனை நடக்கிறது.  இந்த சோதனையால் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!