கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் சுப்பன் ஆசாரி களத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பணிக்கம்பட்டி மெயின் சாலையில் இருந்து சுப்பன் ஆசாரி களம் வரை செல்வதற்கு தார் சாலை அமைத்து தர அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் பலருக்கும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தார் சாலை அமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிபிஐஎம் கட்சியினர் மற்றும் சுப்பன் ஆசாரி களத்தைச் சேர்ந்த
பொதுமக்கள் மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தார் சாலை அமைக்கும் வரை தாங்கள் தொடர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சிபிஐஎம் கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் தார் சாலை அமைத்து தரக்கோரும் பகுதி தனி நபர்களுக்கு சொந்தமான பட்டா இடமாக உள்ளது என்றும் மேலும் இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தங்களால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.