திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள சந்துகடை சௌந்தர பாண்டியன் பிள்ளை தெரு பகுதியில் வசிப்பவர் ஜோசப்.நகை பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.
நேற்றிரவு இபி ரோடு பகுதியில் உள்ள வேதாத்திரி நகரில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்று தங்கினார்.
இன்று காலை சந்துக்கடை வீட்டுக்கு வந்து பார்க்கும் போது நகை பட்டறையில் நகைகள் செய்வதற்காக வைத்திருந்த 950 கிராம் தங்கம், கால் கிலோ வெள்ளி, மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளைபோன தங்கம், வெள்ளியின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் இருக்கும்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.மோப்பநாய் கொண்டு வரப்பட்டு விசாரணையை போலீசார் தொடங்கினர். கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
திருச்சி மாநகர போலீஸ் துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிவேத லட்சுமி ஆகியோரும் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாநகரில் நகை பட்டறையில் சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.