கோவை அவிநாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 18ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து நாள்தோறும் ஒவ்வொரு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று முக்கிய நிகழ்வான தீச்சட்டி ஊர்வலம், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று நேர்த்திக்கடன்களை செலுத்தினர். கோவை கோனியம்மன் கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலமானது ஒப்பணக்கார வீதி, வழியாக
அவிநாசி சாலையை வந்தடைந்து தண்டுமாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. நேர்த்திக்கடன் செலுத்தி வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் குடிநீர், நீர் மோர், குளிர்பானங்கள், கூழ் ஆகியவற்றை வழங்கினர்.
மேலும் பலர் நேர்த்திக்கடன் செலுத்துவோரின் பாதங்களுக்கு தண்ணீர் ஊற்றி ஆசி பெறுகின்றனர். இந்நிகழ்வையொட்டி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்து காவல்துறையினரும் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை சீர் செய்தனர்.