பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருகின்ற 29.04.2023 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது….
நமது பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவர்களின் திறமைக்கேற்ற இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலை நாடுனர்களை கலந்து கொள்ள செய்யும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல வேண்டும்
29.04.2023 அன்று நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஓசூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள முன்னனி நிறுவனங்கள் கலந்து கொள்ளப்பட உள்ளனர். இதில் முக்கியமான நிறுவனங்களான MRF நிறுவனம் பெரம்பலூர், TVS நிறுவனம், சென்னை, Kotak Mahindra Group, JBM Auto Ltd, Innovace Group சென்னை, Hindustan Group of Company, Apollo Group of Company உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறவுள்ளது. பெரம்பலுார் மாவட்ட இளைஞர்களுக்கு 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை தர நாங்கள் தயாராக உள்ளோம்.
அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களின் மூலம் முகாம் நடைபெறுவது குறித்து அனைத்து பகுதிகளிலும் விளம்பரங்கள் செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்தல், வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்குதல், விளம்பர பதாகைகள் வைத்தல், உள்ளுர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தல் என அனைத்து வகையிலும் முகாம் நடைபெறுவது குறித்து விளம்பரப்படுத்தி பொதுமக்களிடத்திலும், படித்த இளைஞர்களிடத்திலும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவலை கொண்டு செல்ல வேண்டும்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்று வர ஏதுவாக போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்திட வேண்டும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதை துறை அலுவலர்கள் உறுதிசெய்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
பின்னர் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஏற்படுத்தவுள்ள விழிப்புணர்வு பிரசாரத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் .ம.பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் திருச்சி மண்டல இணை இயக்குநர்(வே.வா) மு.சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ்பாக்கியா, மற்றும் அனைத்துத்துறைகளின் அலவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.