தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர் மர்ம நபர்கள் ஓடிவிட்டனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லூர்து பிரான்சிசை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரான்சிசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் இறந்து விட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
மணல் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் போலீசில் புகார் செய்தததால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வருத்தம் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு மரணம் அடைந்த கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும். மேலும் கருணை அடிப்படையில் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த விஏஓ பொறுப்புணர்வு , கடமை உணர்ச்சியை அரசு போற்றுகிறது. காவல்துறையின் மூலம் உரிய மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.