Skip to content
Home » விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

  • by Authour

கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் (பொ) கோ.பழனிவேலு தலைமையில் நடைபெற்றது. இதில் திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூர் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகளும், அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு மற்றும் சாதாரண கிணறுகளில் பாசனம் செய்ய ஏதுவாக இதுவரை தமிழக அரசு 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஏட்டளவிலே உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு வட்டாரங்களில் பல இடங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மின் இணைப்பை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பல கிராமங்களில் பகல் நேரங்களிலும் தெருமின் விளக்குகள் தொடர்ந்து எரிகிறது. ஆனால் மின் வெட்டும், குறைந்த அழுத்த மின்சார விநியோகமும் அதிகமாக உள்ளது. ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாபட்டு, திருவையாறு அருகே அம்மையகரம் போன்ற கிராமங்களில் குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் பற்றாக்குறையும், கோடை சாகுபடியான உளுந்து, பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருப்பதால், இவ்வாண்டு ஜூன் மாதம் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே டெல்டா மாவட்டங்களில் உடனடியாக தூர்வாரும் பணியினை தொடங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டியில் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும். திருவையாறு புறவழிச்சாலை தொடர்பாக தொடர்ந்து 137 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவாசாயிகளின் உணர்வுகளை உணர்ந்து, பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி பகுதிகளில் நீர் ஆதாரங்களாக திகழும் ஆறுகள், வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டி எரியூட்டுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர். இந்த கோரிக்கைகளை அனைத்தையும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *