தமிழக முதல்வரின் சிறப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. தற்போது இந்த பணிகள் திருச்சி கருமண்டபம் திண்டுக்கல் மெயின் ரோட்டில் நடக்கிறது.
பாதாள சாக்கடை அமைப்பதற்கான பணிகளுக்காக ஆங்காங்கே உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை மாநகராட்சி பெண் அதிகாரி ஒருவரும் ஆய்வு செய்து வருகிறார்.
கருமண்டபத்தில் உள்ள ஒரு பிரியாணிக்கடை முன் பாதாள சாக்கடைக்கு கால்வாய் தோண்டியபோது அந்த கடை ஏற்கனவே ஆக்ரமிப்பு செய்திருந்த பகுதியை அகற்ற அதிகாரிகள் முற்பட்டனர். அதற்கு பிரியாணிக்கடை உரிமையாளர், தங்கள் கடை முன் உள்ள பகுதியில் தங்கள் கடைக்கு சிறிது இடம் விட்டு விட்டு கால்வாய் தோண்டும்படி கூறி உள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், கால்வாயை சற்று வளைத்து தோண்டத்தொடங்கினர்.
இதன கவனித்த பக்கத்து பிளாட்காரர் என்னுடைய இடத்தில் மட்டும் இவ்வளவு இடத்தை எடுத்து வாய்க்கால் தோண்டப்பட்டுள்ளது. பிரியாணிக்கடைக்காரருக்கு சாதகமாக வாய்க்கலை வளைத்து அமைக்கிறீர்கள். ஏன் இந்த பாகுபாடு?
எல்லாருக்கும் பொதுவாக நேர் மையாக பாதாள சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். இ்லாவிட்டால் என் இடத்தில் எடுத்த இடத்தை நான் விட்டுகொடுக்கமாட்டேன் என தகராறு செய்தார். இதனால் பணி தொடர்ந்து நடைபெற முடியாமல் நிறுத்தப்பட்டது.
இது குறித்து கருமண்டபம் பகுதி மக்கள் கூறியதாவது:
திருச்சி மாநகருக்கு பாதாள சாக்கடைஉடனடியாக தேவை. அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை சரியாக நடத்த வேண்டும். திருச்சி கலெக்டர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதாள சாக்கடை கால்வாய் வெட்டும் இடத்தை ஆய்வு செய்து அவரது ஆலோசனையின் பேரில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.