திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பணத்துடன் அந்த காரை பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தது கோவை கே.கே.புதூரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 52), கணபதி பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
வையம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வரும் தங்கவேல் என்பவருக்கு அந்த பணத்தை கொண்டு வந்ததும், அவர் கடை முன்பு தான் போலீசார் பிடித்ததும் விசாரணை வெளிவந்துள்ளது. பிடிபட்ட பணம் அனைத்தும் கள்ள நோட்டு என்பதும் கேரளாவை சேர்ந்த ஒரு பட தயாரிபாளர் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
பிடிபட்ட கள்ளநோட்டுகள் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் அச்சடிக்கப்பட்டு கோவை நபர்கள் மூலம் அந்த கள்ள நோட்டுகள் தமிழகத்தில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பல் தலைவனாக படத்தயாரிப்பாளர் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.