டில்லியில் காராவல் நகர் பகுதியில் கிருஷ்ணா அரசு பள்ளியருகே அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு உள்ளது. இதன் பேரில் நடந்த விசாரணையில், அவர் ரோஹினா நாஜ் என்ற மஹி (25) என தெரிய வந்தது.
உத்தரகாண்டின் மிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவரான நாஜ், வினீத் பவார் என்பவருடன் 4 ஆண்டுகளாக லிவ்-இன் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்து உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வினீத் மற்றும் அவரது தந்தை வினய் பவார் இருவரும் ரமலா சர்க்கரை ஆலையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சிக்கினர். 2019ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று வினீத் சிறை சென்றதும், அவரது சகோதரியான பருல் என்பவருடன் மஹி ஒன்றாக வசித்து வந்து உள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ஜாமீனில் வினீத் வெளிவந்ததும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் ரோஹினா நாஜ் தொடர்ந்து வலியுறுத்தி வந்து உள்ளார். ஆனால், வேறு சமூகம் என்று கூறி வினீத்தின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், நாஜை நல்ல விலைக்கு விற்று விடலாம் என வினீத் மற்றும் அவரது சகோதரி முடிவு செய்து உள்ளனர். எனினும், இந்த விசயம் நாஜுக்கு தெரிய வந்து உள்ளது.
அவர் பதிலடியாக சண்டை போட்டு உள்ளார். இதுபற்றி வினீத்திடம் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தும் வந்து உள்ளார். இதனால் அவரை கொலை செய்வது என வினீத் மற்றும் பருல் முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் மீண்டும், திருமணம் பற்றிய பேச்சு எழுந்து அந்த ஜோடிக்கு இடையே சண்டை வந்துள்ளது. இதில், நாஜ் மீது தாக்குதல் நடத்திய வினீத், அவரை அடித்து, கழுத்து நெரித்து கொலை செய்து விட்டார். உடலையும் மறைத்து விட்டார். அதன்பின், அன்று மாலை நண்பர் ஒருவரை அழைத்து உள்ளார். அவருடைய மோட்டார் சைக்கிளில் நாஜின் உடலை வைத்து, பின்புறம் பருல் துணையுடன் 12 கி.மீ. தொலைவில் காராவல் பகுதியில் ஒரு வீட்டுக்கு வெளியே தூக்கி வீசி விட்டு தப்பி விட்டனர். இதனை தொடர்ந்து பாக்பத் என்ற தனது சொந்த கிராமத்திற்கு வினீத் ஓடிவிட்டார். அவர்கள் தங்களது வீட்டை விற்று விட திட்டமிட்டிருந்த நிலையில், பருல் வாடகை வீடு தேடி அலைந்து உள்ளார். அப்போது, அவரை விசாரணையின்போது போலீசார் பிடித்து, கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.