அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா உள்ளிட்ட சிண்டிகேட் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் உறுப்பினர் மாற்றத்திற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளில் தொடர்புடைய 9 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பதவி உயர்வு குறைப்பும் செய்யப்பட்டுள்ளதுடன், மற்றவருக்கு 3 ஆண்டுகளுக்கான பணப்பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் படிக்கும் போது ஏற்பட்ட விபத்து, அல்லது திருமணம் செய்து கொண்டு சென்றது போன்ற குடும்ப சூழ்நிலைகள் காரணமாக பாதியில் நின்ற 168 மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் படிப்பதற்கு அவர்கள் அளித்த கடிதத்தின் உண்மைத் தன்மையை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது