நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் வருவாய்த்துறையில் வடகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல தனக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்தை பட்டினச்சேரி புயல் பாதுகாப்பு மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பியோடி உள்ளனர். கார் பற்றி எரிந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்
நிலைய ஆய்வாளர் சிவராமன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முன் விரோதம் காரணமாக கார் கொழுத்தப்பட்டு இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் எரிக்கப்பட்ட இடத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நாகை அருகே அரசு ஊழியரின் நான்கு சக்கர வாகனம் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.