கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் மின் உபயோகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக 42.37 கோடி யூனிட் மின்சாரம் மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்த அளவு தேவையை மின்வாரியம் தடங்கலின்றி வழங்கி உள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை வள்ளாலகரம், சேந்தங்குடி ஜோதிநகரை சேர்ந்த மணிபாரதி என்பவர் வீட்டில் நேற்று இரவு குறைந்த மின் அழுத்தம்(லோ வோல்டேஜ்) ஏற்பட்டு மின்விசிறிகள் சரியாக சுற்றவில்லை. விளக்குகளும் சரியாக எரியவில்லை. ஏசியை ஆன் செய்தால் அது உடனே ஆப் ஆகி விட்டது. உடனடியாக மணிபாரதி, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று இரவு 10.34 மணிக்கு ஒரு ட்விட் போட்டார்.
அதில் தனது வீட்டில் லோ வால்டேஜ் பிரச்னை இருப்பதால் தனக்கு மிகுந்த மனவேதனை தருகிறது.எனவே தயவு கூர்ந்து உடனடியாக லோ வோல்டேஜ் பிரச்னையை சரிசெய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டு
இருந்தார்.
இந்த ட்விட்டை பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பணிபாரதிக்கு ட்விட்டரில் பதில் தெரிவித்தார். அதில் அன்பு சகோதரரே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார். இது குறித்து அமைச்சர் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து மணிபாரதி வீட்டில் ஏற்பட்டுள்ள லோ வோல்டேஜ் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மணிபாரதி வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து லோ வோல்டேஜ் பிரச்னையை சரிசெய்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மணிபாரதி , மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்தார்.