உலகம் முழுவதும் இன்று உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் கல்லீரல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு “உங்கள் கல்லீரலை நேசியுங்கள்” என்ற தலைப்பில் அனுசரிக்கப்படுகிறது.
உலக கல்லீரல் தினத்தை அனுசரிக்கும் விதமாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனை திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் இருந்து கல்லீரலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது, திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை வரை சென்று மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இப்பேரணியின் மூலம் மனித உடலுக்கு கல்லீரலின் அவசியம், கல்லீரலின் பாதுகாப்பு, கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை செவிலியர்கள் கையில் ஏந்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
இந்நிகழ்வில் அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் மருத்துவர் குமரகுருபரன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய் கணேசன், வயிறு குடல் கல்லீரல் மருத்துவர்கள் முரளிரங்கன் மற்றும் செந்தூரன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.