காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி?” என பேசியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர் மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பு அளித்தார். மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு விதித்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்ததுடன், ஜாமீன் வழங்கியும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை அடுத்து ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் கடந்த 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார். அத்துடன் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ந்தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தார். அதன்படி 13-ந்தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது ராகுல் தரப்பு வக்கீல் கூறியதாவது:- ராகுல் வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை தேவையில்லை. விசாரணை கோர்ட்டின் குற்றத்தீர்ப்புக்கு தடை வழங்காவிட்டால், அது அவரது புகழுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி விடும். அவருக்கு அதிகபட்ச தண்டனை விதித்திருப்பது சட்டத்துக்கு முரணானது. தேவையற்றது. ராகுல் குற்றவாளி என தீர்மானித்தது தவறானது, பொதுவான வக்கிரம். அவர் எம்.பி. என்ற அந்தஸ்தின் தாக்கத்தால் அவரை கோர்ட்டு கடுமையாக நடத்தி உள்ளது. எம்.பி. என்பதால் அவரது பதவியை பறிக்க ஏதுவாகத்தான் அவருக்கு அதிகட்ச தண்டனை விதிக்கப்பட்டது. ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்காமல், பதவி பறிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அவர் விடுதலை செய்யபட்டாலும் கூட, அதை ரத்து செய்ய முடியாது. இந்த தேர்தலால் அரசு கஜானாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பும் ஏற்படும். எனவே ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ப்பு ராகுல் மீது வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடி தரப்பில் வாதிடுகையில், “ராகுல் மீது பல்வேறு கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும் அவர் திரும்பத்திரும்ப அதே குற்றத்தை செய்து வருகிறார். அவர் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்ற விதத்தில் பேசி வருகிறார். இது மற்றவர்களை களங்கப்படுத்துவதுடன், உணர்வுகளையும் புண்படுத்துகிறது. எனவே அவர் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கூடாது” என கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் மனு மீதான தீர்ப்பை 20-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். எனவே இன்று (வியாழக்கிழமை) அந்தத் தீர்ப்பு வருகிறது. அப்போது அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி என சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா அளித்த தீர்ப்புக்கு தடை வந்தால், அது ராகுலின் எம்.பி. பதவி பறிப்பையும் நிறுத்தி வைக்கும், அவர் மீண்டும் மக்களவை செல்ல வழி பிறக்கும். எனவே இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.