தேர்தல் நேரங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் விளம்பரத்துக்கா பல யுத்திகளை செய்வார்கள். சிலர் காந்தி வேடத்தில் வருவார்கள். கர்நாடகத்திலும் ஒரு சுயேச்சை வேட்பாளர் இன்று டெபாசிட் பணத்தை 10 ஆயிரம் ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடகத்தில் உள்ள யாதகீர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான யாங்கப்பா என்பவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக இன்று தேர்தல் அலுவலகம் வந்தார். டெபாசிட் தொகையாக அவர் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். அதை தொகையை அவர் 1 ரூபாய் நாணயங்களாக செலுத்தினார். அவர் வாக்காளர்களிடம் இருந்து 1 ரூபாய் நாணயங்களாக சேகரித்து ரூ.10 ஆயிரம் திரட்டி வந்து செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய யாங்கப்பா, எனது வாழ்வை என்னுடைய சமூகத்தினருக்கும், கிராமவாசிகளுக்கும் அர்ப்பணிப்பேன். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகள் எழுதப்பட்ட போஸ்டர்களுடன் வந்து, தேர்தல் அதிகாரியை சந்தித்தேன் என கூறியுள்ளார்.
10 ஆயிரம் நாணயங்களை எண்ணி முடித்த பிறகு, அந்த நாணயங்கள் சாியாக ரூ.10 ஆயிரம் இருந்தால் தான் வேட்புமனுவை ஏற்க முடியும் என தேர்தல் அதிகாரி கூறிவிட்டார். இதனால் தேர்தல் அலுவலகத்தில் அவர் வெகுநேரம் காத்திருந்தார்.