கோவை, பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உயர்நிலை பள்ளி. இந்த பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து வருவதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ் (15) பலமுறை அழைத்தும் பள்ளிக்கு வராமல் பல காரணத்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதை அறிந்த பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ராஜசேகர் என்பவர் மாணவனை காண வீட்டிற்க்கு வந்துள்ளார் அங்கிருந்த சஞ்சீவிடம் பள்ளிக்கு வராததுக்கான காரணத்தை கேட்டபோது தனது சித்தி உள்ளூரில் நடைபெறும். கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம்
எடுக்க போவதாகவும் அதனால் பள்ளிக்கு வரவில்லை என்று ஒரு காரணத்தை கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த ஆசிரியர் நாளை
பொது தேர்வை வைத்து கொண்டு ஏன் பள்ளிக்கு வர மறுக்கிறாய் என மாணவனுக்கு அறிவுரை கூறி ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் உதவியுடன் மாணவனை கல்வி பயில தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார் அந்த ஆசிரியர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவன் கல்வி கற்க பள்ளிக்கு வரவில்லை என்பதற்காக ஆசிரியர் ஒருவர் மாணவனின் வீட்டிற்க்கு வந்து அறிவுரை கூறி அழைத்து சென்றது ஆசிரியர்கள் மீதான மரியாதை உயர்துவதாக பெருமையாக பேசிக்கொண்டனர். இந்த பள்ளி அனைத்து வகையிலும் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் காமராஜர் விருதை 2017ம் ஆண்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.