தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா டிகுரூஸ். தமிழில் நண்பன் என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவருக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், நல்ல செய்தி!! என தெரிவித்து உள்ளார். தொடர்ந்து, விரைவில் வரவுள்ளது. என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட வாசகம் காணப்படுகிறது. எனினும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. அவரது இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் ஆனந்தத்தில் தங்களது வாழ்த்துகளை குவிக்க தொடங்கி விட்டனர். வாழ்த்துகள் டார்லிங் என்றும், ஓ மை காட்! வாழ்த்துகள் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனினும் வேறு சிலர், உங்களுக்கு திருமணம் ஆகியுள்ளதா? என்றும் குழந்தைக்கு தந்தை யாரென்றும் கேட்டு உள்ளனர்.
மற்றொருவர், தயவு செய்து பிற விவரங்களையும் வெளியிட முடியுமா? என்று கெஞ்சி கேட்டு உள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இலியானா எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ‘எப்போதும் சிறந்த கணவராக இருப்பவர்’ என அவரை தனது இன்ஸ்டாகிராமில் இலியானா குறிப்பிட்டார். ஆனால், அவர்களுக்கு இடையே திருமணம் நடந்து விட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.
2019-ம் ஆண்டில் இந்த நட்பு முடிவுக்கு வந்தது. அதனையும் சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து கொண்டார். இதன்பின் சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார் என தகவல்கள் வெளிவந்தன. கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசல் ஜோடியுடன் மாலத்தீவில் இலியானாவும் ஒன்றாக காணப்பட்டார். அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். அதில் கைப்பின் சகோதரர் செபாஸ்டியனும் ஒன்றாக காணப்பட்டார். கடைசியாக, நடிகர் அபிஷேக் பச்சனுடன் பிக் புல் என்ற படத்தில் இலியானா நடித்து உள்ளார். அடுத்து அன்பேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் ரன்தீப் ஹூடா ஜோடியாக நடித்து வருகிறார்.