தெலுங்கானா மாநிலம் ஜசாய்குடா, சாய் நகர் பகுதியில் மரக்கடை உள்ளது. இந்த மரக்கடையில் 30 டிரம்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவதற்காக டீசல் மற்றும் ஆயில்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் 10 கியாஸ் சிலிண்டர்களும் இருந்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மர குடோனில் இருந்த கியாஸ் சிலிண்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் பயங்கர தீ பரவியது. மரக்கடையில் இருந்த கட்டைகளில் தீப்பற்றி மளமளவென எரிந்தன. தீ மரக்கடைக்கு அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்திற்கு பரவியது.
அதிகாலை நேரம் என்பதால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென அடுக்குமாடி குடியிருப்பு தீ பற்றி எரிந்ததால் உறக்கத்தில் இருந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். 2-வது தளத்தில் வசித்து வந்த நரேஷ் (வயது 37), அவரது மனைவி மற்றும் 7 வயது மகன் மீது தீ பற்றியது. அவர்கள் உடல் கருகி வீட்டுக்குள்ளேயே இறந்தனர். குடியிருப்பு முழுவதும் கரும் புகை சூழ்ந்ததால் அங்திருந்த மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு உயிர் பயத்தில் தப்பி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அடுக்கு மாடியில் யாராவது சிக்கிக் கொண்டார்களா என ஒவ்வொரு வீடாக தேடிப் பார்த்தனர். அப்போது நரேஷ் அவரது மனைவி, மகன் உடல்களை மீட்டனர். இதனை கண்டு அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த தீ விபத்தில் பெண்கள் உட்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.