பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை 4.35 மணியளவில் 4 வீரர்கள் காயங்களுடன் இறந்து கிடந்தனர். பீரங்கி படையை சேர்ந்தவர்கள். அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் (24) ஆகிய 4 வீரர்களும் குண்டு பாய்ந்து பலியானார்கள். இதில் கமலேஷ், யோகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் போலீசும் ராணுவமும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராணுவ வீரரின் பெயர் தேசாய் மோகன் ஆவார். இதை பதிண்டா மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு குல்னீத் சிங் குரானா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, இதன் நோக்கம் தனிப்பட்டது. அவர்களுடன் அவருக்கு தனிப்பட்ட பகை இருந்து உள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு உள்ளார் என்றார்.