ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப். அறிவித்துள்ளது.
சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டனர் என முதல்கட்ட தகவல் வெளியானது. 170 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், பலி எண்ணிக்கை நேற்று 56 ஆக அதிகரித்தது. அவர்களில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளார் என தகவல் வெளியானது. தொடர்ந்து சூடானில் இன்றும் ராணுவ மோதல் நீடித்து வருகிறது. இதில், ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த மோதலில் துணை ராணுவ தளங்கள் மீது சூடான் ராணுவம் தற்போது வான்வழி தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த மோதல்களுக்கு அமெரிக்கா, சீனா, ரஷியா, எகிப்து, சவுதி அரேபியா, ஐ.நா. அமைப்புகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்து உள்ளதுடன் இந்த மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி வேண்டுகோளும் விடுத்து உள்ளது. எனினும், மோதலில் ராணுவத்தின் கை மேலோங்கி உள்ளது என கூறப்படுகிறது. இதனால் சண்டையை நிறுத்துவதற்கான முயற்சிகள் முழுமை அடையவில்லை.