திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகிறார்கள். ஞாயிறு, மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இங்கு பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தமிழகத்தில் பழனிக்கு அடுத்ததாக பக்தர்கள் அதிகம் வரும்கோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும், சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
சித்திரை தேரோட்டத்திற்காக மாசி மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் விழாக்காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வறுத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் காலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தேரோடும் வீதியில் கிராம சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு முன்பு பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாக எடுத்து வந்து ராஜகோபுரம் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழா நாளை நடைபெறவுள்ளது. காலை 10.31-லிருந்து 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவை முன்னிட்டு திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்துநெரிசலை தவிர்க்கவும், மதியம் 3 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் கோயிலில் இருந்து நம்பர் 1 டோல்கேட் வரை ஆங்காங்கே பக்தர்கள் நேர்த்திக்டனுக்காக அன்னதானம், நீர் மோர் வழங்குவார்கள்.
சமயபுரம் தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.