Skip to content
Home » சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

சீர்காழி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 23 உலோக சிலை, 493 செப்பேடுகள் கண்டெடுப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோயில் உள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24-ம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாகசாலை அமைக்க மண் எடுப்பதற்காக, கோயில் உட்புறத்தில் மேற்கு கோபுர வாசல் அருகே நேற்று பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. 2 அடி ஆழத்தில் தோண்டியபோது, அங்கு சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த இடத்தில் தோண்டியபோது விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர், அய்யனார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உட்பட 23 சுவாமிகளின் உலோகச் சிலைகள் கிடைத்தன. இவை அரை அடி முதல் 2 அடி வரை உயரம் கொண்டவையாக இருந்தன. மேலும், 410 முழுமையான செப்பேடுகள், சேதமடைந்த நிலையில் 83 என 493 செப்பேடுகள், 16 பூஜைப் பொருட்கள், 15 பீடங்கள், 50 கிலோ அளவிலான சேதமடைந்த நிலையில் உள்ள உலோகப் பொருட்கள், கலசங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இந்த சிலைகள் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். செப்பேடுகளில், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி தேவாரப் பதிகம் இடம்பெற்றுள்ளது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. சுவாமி சிலைகள் ஐம்பொன்னால் ஆனவையாகவும் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. எனினும், இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பிறகே தெரியவரும். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு வந்து சிலைகள், செப்பேடுகள், பூஜை பொருட்களை பார்வையிட்டு, செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளவற்றை படித்துப் பார்த்தார். மேலும், கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!