தமிழ்ப்புத்தாண்டு நாளை (வெள்ளிக்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் டில்லியில் உள்ள அவரது இல்ல வளாகத்தில் இன்று மாலை தமிழ்ப்புத்தாண்டை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொள்கிறார். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு தென் மாநிலங்களை சேர்ந்த பல எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், அ.தி.மு.க. எம்.பி.க்கள் என அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரி எல்.முருகன் தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளார். வழக்கமாக டில்லியில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை மட்டுமே கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஏற்பாட்டின் பேரில் முதல் முறையாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.