Skip to content
Home » மத்திய அரசின் விருது…. தமிழக மின்துறை ஒளிர்கிறது…. பேரவையில் இனிகோ பேச்சு

மத்திய அரசின் விருது…. தமிழக மின்துறை ஒளிர்கிறது…. பேரவையில் இனிகோ பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் நேற்று மின்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில்  பங்கேற்று திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதராஜ் பேசினார். அவர் பேசியதாவது:

2வருடகாலமாக ஏழை மக்களின் வாழ்வில் மாபெரும் ஒளிவிளக்காக இருக்கிற தன்னிகரில்லா தலைவர், தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொரு நாளும் மீட்டுக்கொண்டிருக்கும்  தளபதி   முதல்வர் அவர்களுக்கு  முதலில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

சம்சாரம் அது மின்சாரம் என்று சொல்வார்கள். சம்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. அது ஷாக் அடிக்கும் துறை.  இந்தியாவின் பிற மாநிலங்களும்  பாராட்டும் அளவுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறை செயல்படுகிறது. அதற்கு ஆண்டவரைத்தான்  பாராட்ட வேண்டி உள்ளது. இதற்கு முன் ஆண்ட கலைஞர் கொடுத்த அடித்தளம் தான் மின்துறையின் சாதனைக்கு காரணம்.

பொருளாதார வளர்ச்சிக்கு காரணம், அந்த நாட்டின் வளம், தொழில், வர்த்தக சூழல். ஆனால் இவற்றுக்கு உயிர் மின்சாரம் தான். மின்சாரத்தை  உற்பத்தி செய்வதும், அதை நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதும்  மின்சாரத்துறை.

திமுக ஆட்சி காலங்களில் தான் தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்கள்  தீட்டப்பட்டுள்ளது. இதனால் தான் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அதிகம்  உருவாகி உள்ளது. எனவே தான் ஜிடிபி 8.4%மாக வளர்ந்துள்ளது.இதற்கு காரணம் கலைஞர் வகுத்த திட்டம்.

மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய  இழப்பை சந்தித்துள்ளது. 2011-12ம் ஆண்டில் மின்வாரியத்தில் கடன் 10,166 கோடி. ஆனால் 2020-21ல் 1லட்சத்து59 ஆயிரத்து 823 கோடி ரூபாய் கடன்  உயர்ந்து உள்ளது. அதுமட்டுமல்ல தனியார்  மின் உற்பத்தியாளர்களிடம் ஓவர் டியூவாக ரூ.16,917 கோடி ரூபாய் கடனும் வைத்து விட்டு போய் விட்டார்கள்.

இதை எல்லாம்  சுமக்க வேண்டிய நிலை நமது அரசுக்கு ஏற்பட்டுஉள்ளது. இவ்வளவு கடன்கள் இருந்தும் நமது முதல்வரின் திறமையாலும், மின்துறை அமைச்சரின் அயராத  உழைப்பாலும்  தமிழ்நாடு மின்சாரத்துறை இன்று இந்தியாவில் மின் உற்பத்தியில்  குஜராத், மகாராஷ்டிராகவுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் உள்ளது.

3வது இடத்தில் இருந்தாலும் தமிழ் நாட்டில் தான் கடைக்கோடி குடிசைக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. உதாரத்துக்கு ஒன்றை சொல்ல வேண்டுமானால் நமது ஜனாதிபதி அவர்கள் பிறந்த ஊரில், அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் வரைக்கும் மின்சாரம் கிடையாது.

நானும் விவசாயி, நானும் விவசாயி என்று சொல்கிறவர்கள் மத்தியில் நமது முதல்வர் அவர்கள்  விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கொடுத்தவர் கலைஞர் அவர்கள். ஒன்றரை ஆண்டில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட விவசாயிகளுக்கு 2017க்கு பிறகு  மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்கிறார்கள். ஒன்றிய அரசு வற்புறுத்தலின் பேரில் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்படி இருந்தும் 15 மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம்  குறைவு. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. அடுத்த 100 யூனிட், அதாவது 200 யூனிட் மின்சாரத்திற்கு ரூபாய் 225 தான் மின் கட்டணம்.  அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் 935ரூபாய்.

2022-23ம் ஆண்டுக்கான புனல் மின் உற்பத்தியில்  ஒன்றிய அரசின் குறியீடான 261 மில்லியன் யூனிட் உற்பத்தியை எட்டி அதற்கான தங்க விருது தமிழ்நாடு மின்சாரத்துறை பெற்றுள்ளது.  தமிழ்நாட்டில் மின் இணைப்பு கேட்டால் உடனடியாக கொடுக்கப்படுகிறது. இந்த வசதி வேறு எங்கும் இல்லை.

எனது தொகுதியான கே.கே. நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வேண்டும் என  மின்துறை அமைச்சரிடம் போன் மூலம் கேட்டேன் 10நாளில்  அங்கு டிரான்ஸ்பார்மர் வசதி செய்யப்பட்டது. அத்துடன் மின்துறையில்  வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தி  சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மின்உற்பத்தியில் ஜப்பான், டென்மார்க் நாடுகள் சிறப்பாக செயல்படுகிறது. ஜப்பானில் வீடுகள்தோறும்  மின் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்குகிறார்கள். அதுபோல டென்மார்க்கில் 42% மின் உற்பத்தி காற்றாலை மின் உற்பத்தி தான். அதையும் தனியார் உற்பத்தி செய்து அரசுக்கு கொடுக்கிறார்கள். அதுபோன்ற தமிழகத்திலும் மின் உற்பத்தியை பெருக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இன்னும் 10 ஆண்டுகளில் தற்போதைய மின் நுகர்வைப்போல  70% அதிகம் மின் நுகர்வு இருக்கும். அதை சமாளிக்க இப்போதே நம் மின்துறை திட்டமிட்டு  சிறப்பாக செயல்படுகிறது. மின்துறை மிளிர்கிறது. ஒளிர்கிறது.

திருச்சியில் ஒரு டைடல் பார்க் ஏற்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.  உச்சிபிள்ளையாரை தரிசிக்க ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.  திருச்சி பெண்கள் சிறையை இடமாற்றம் செய்து   மார்க்கெட்டை விரிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையினர் என்றாரே ஒன்றிய அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. அவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை நிறுத்தி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!