கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதாவில் இருந்து மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள்.
கர்நாடகத்தில் பா.ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் இன்னொரு மூத்த தலைவர் ஈசுவரப்பாவும் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர்கள் பா.ஜனதாவில் நீடிக்கிறார்கள்.
இந்த நிலையில் ராணிபென்னூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால், அதிருப்தி அடைந்துள்ள சங்கர் எம்.எல்.சி. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். ராணிபென்னூர் தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
லட்சுமண் சவதி எம்.எல்.சி. கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர் எடியூரப்பா மந்திரிசபையில் (2019-21) துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பிறகும் அவருக்கு முக்கிய பதவியை பா.ஜனதா வழங்கியது. எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு பதவி விலகினார். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் லட்சுமண் சவதிக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் தனக்கு போட்டியிட டிக்கெட் வழங்குமாறு லட்சுமண் சவதி கேட்டார். ஒருவேளை டிக்கெட் வழங்காவிட்டால், கட்சியில் நீடிக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் அதானி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மகேஷ் குமடள்ளிக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். ரமேஷ் ஜார்கிகோளியின் நெருங்கிய ஆதரவாளர்.
அதானியில் தனக்கு டிக்கெட் வழங்காததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய லட்சுமண் சவதி, பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். லட்சுமண் சவதி முன்பு எடியூரப்பா மந்திரிசபையில் (2008-13) மந்திரியாக பணியாற்றியபோது, சட்டசபை கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த தலைவரான லட்சுமண் சவதியின் விலகல், வட கர்நாடகத்தில் குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அவர் விரைவில் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மீனவர் நலன் மற்றும் துறைமுகங்கள் துறை மந்திரியாக உள்ள எஸ்.அங்கார், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சுள்ளியா தொகுதியில் அவர் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் அதே தொகுதியில் டிக்கெட் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அங்கு அவருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் நேர்மைக்கு இடம் இல்லை என்று கூறியுள்ள அவர், இந்த தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய மாட்டார் என்று சொல்லப்படுகிறது.
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெகதீஷ் ஷெட்டர். முன்னாள் முதல்-மந்திரியான அவர், எடியூரப்பா மந்திரிசபையில் (2019-21) தொழில்துறை மந்திரியாக பணியாற்றினார். பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியான பிறகு அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தனது தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக அவர் தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு டிக்கெட் இல்லை என்று பா.ஜனதா மேலிடம் கூறியுள்ளது. புதியவர்களுக்கு வழிவிடுமாறு அவரை கட்சி மேலிடம் கேட்டு கொண்டுள்ளார். இதை ஜெகதீஷ் ஷெட்டர் நிராகரித்துவிட்டார். தான் தேர்தலில் தனித்து போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார். இதையடுத்து உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பை பா.ஜனதா மேலிடம் நிறுத்தி வைத்துள்ளது. ஜெகதீஷ் ஷெட்டர் முதல்-மந்திரி ஆவதற்கு முன்பு மந்திரியாகவும், சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவருக்கு உப்பள்ளி மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் செல்வாக்கு உள்ளது. அவர் தனித்து போட்டியிட்டால், அது பா.ஜனதாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அதனால் அவரை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே ஈசுவரப்பா ஆதரவாளர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். இதனால் கர்நாடக மாநில பாஜக கலகலத்து போய் உள்ளது. ஒருபுறம் ஊழல், மக்கள் எதிா்ப்பு, இன்னொருபுறம் உள்கட்சி குழப்பம் என பாஜக திணறிக்கொண்டு இருக்கிறது. இதுவே காங்கிரஸ் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.