தமிழ்நாடு சட்டசபையில் இன்று மின்வாரிய துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தை நவீனமாக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு. மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்துக்கு புதிதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்படும். மின்னூட்டம் உள்ள போதே பழுதுகளை சரிசெய்யும் நவீன இன்சுலேட்டட் ஏரியல் பக்கெட்டுடன் கூடிய வாகனம் வாங்கப்படும். மின்பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய அதிக திறன் வாய்ந்த கேமராக்களோடு கூடிய டிரோன்கள் வாங்கப்படும். வட சென்னை அனல் மின்நிலையம் 1 வளாகத்துக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரியை கையாள புதிய வேகன் டிப்ளர் இயந்திரம் நிறுவப்படும்.
ஸ்ரீரங்கம், கரூர், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் தேரோடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதை வடங்களாக மாற்றப்படும். ரூ.1.50 கோடியில் தலைமை செயலகம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனரகத்தில் 100 கிவாட் திறன் கொண்டசூரிய சக்தியால் இயங்கும் வாகன மின்னூட்டல் நிலையம் நிறுவப்படும். நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 72 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும். மதுரை, கோவை, கரூர் நகரங்களில் மேல்நிலை மின் கம்பிகள் புதை வடங்களாக மாற்றப்படும். ரூ.16.68 கோடியில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் மேம்படுத்தப்படும். மேட்டூர் அனல் மின் நிலையம் 1,2 ஆகியவற்றை மேம்படுத்த ரூ.212.68 கோடியில் சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.84.67 கோடியில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகிரி மோயர் புனல் மின் நிலையத்தின் உயர் அழுத்த நீர் எடுத்து செல்லும் குழாய்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அறிவிப்புகளை வெளியிட்டார்.