சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சிறப்பான மைல்கல்லை எட்டியுள்ளார். இரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் துவங்கிய போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும். வேறு யாரும் இந்த சாதனையை படைத்ததில்லை. இதைத்தொடர்ந்து டோனிக்கு, அணி உரிமையாளர் சீனிவாசன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். 2010, 2011, 2018 மற்றும் 2021 என நான்கு முறை தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிஎஸ்கே. 2010 மற்றும் 2014-ல் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. 199 போட்டிகளில் தோனியின் தலைமையில் 120 வெற்றிகளை சென்னை அணி பெற்றுள்ளது. 78 போட்டிகளில் தோல்வி மற்றும் 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.