குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது 10 ஆண்டு கால மனைவிக்கு எதிராக உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் விசித்திர வழக்கு தொடர்ந்து உள்ளார். போலீசார் அவரது வழக்கை பதிவு செய்யவில்லை. இதனால், நேராக அவர் கோர்ட்டுக்கு சென்று வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அதில், தனது மனைவி முதல் திருமணம் நடந்த தகவலை தன்னிடம் மறைத்து விட்டார். இதனால், அவரது 2-வது கணவராக நான் இருக்கிறேன். தனது மனைவி, அவரது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒப்புதலை மோசடியாக என்னிடம் இருந்து பெற்று விட்டார்.
அது பலாத்காரம் அளவிலானது என தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஆனால், விசயம் இத்துடன் முடியவில்லை. இந்த தம்பதியின் 10 ஆண்டு கால மண வாழ்வில் அவர்களுக்கு 2 குழந்தைகள் வளர்ந்த நிலையில் உள்ளனர். அமைதியாக அவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோது, திடீரென கணவருக்கு சந்தேகம் வந்ததில் குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்து உள்ளார். அதில் ஒரு குழந்தை, இவருக்கோ, முதல் கணவருக்கோ கூட பிறக்கவில்லை.
அது யாரோ ஒரு 3-வது நபருக்கு பிறந்த குழந்தை என தெரிந்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். மனைவிக்கு தகாத தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் கணவருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவரது கடந்த கால வாழ்வை பற்றி அலசி ஆராய தொடங்கினார். அதில், 3-வது நபர் ஒருவருடன் மனைவி சாட்டிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த தகவல்களை பார்த்ததும் தம்பதிக்கு இடையே சண்டை மூண்டது. இதில், இரு வீட்டு குடும்பத்தினரும் சமரசம் ஏற்படுத்த முயன்று பலனின்றி போனது. இதனால், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக கணவர் பாலியல் பலாத்கார வழக்கு தொடுத்து உள்ளார். இதனை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நேற்றுவிசாரணைக்கு ஏற்று கொண்டு உள்ளது.