கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்த பிச்சமணி என்பவரின் மகன் காசிநாதன் (34). நெல் அரவை இயந்திர டிரைவர். இவர் தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தபோது திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரை தவறானவர் என்பது போல் சித்தரித்து இன்ஸ்டாகிராமில் காசிநாதன் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த இளம் பெண் இதுகுறித்து கடந்த 1ம் தேதி தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து காசிநாதனை சைபர் க்ரைம் போலீசார் தேடி வந்தனர். அவரது செல்போன் டவர் காட்டிய பகுதி உட்பட பல்வேறு வகையிலும் சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது காசிநாதன் அவரது சொந்த ஊரில் ஒரு தோப்பில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காசிநாதனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நீதிபதி முன்பு காசிநாதனை ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.