தஞ்சை மேலத்தெரு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அபிராமி (34). இவர் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் உட்பட பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பணம், ஏ.டி.எம். கார்டு போன்றவற்றை பிக்பாக்கெட் அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் தஞ்சை கீழவண்டிக்கார தெருவை சேர்ந்த வீரமணி என்பவரிடம் இருந்து அவரது கவனத்தை திசை திருப்பி ரூ.35 ஆயிரத்தை திருடி கொண்டு அபிராமி தப்பி சென்றார். இதேபோல் ரெட்டிபாளையம் கவிதாவிடம் ரூ.25 ஆயிரம், பாபநாசம் மேலவழுதூரை சேர்ந்த சிவானந்தம் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தையும் அபிராமி பிக்பாக்கெட் அடித்துள்ளார்.
இதுகுறித்த புகார்களின் பேரில் தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் டவுன் டிஎஸ்பி., ராஜா மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமியை தேடி வந்தனர். இந்நிலையில் நகர் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் அபிராமி சுற்றி திரியும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அபிராமி பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1.10 லட்சத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.