சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இம்மாதம் வரை டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் அடுத்த அரையாண்டுக்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் வருகிற 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 40 பேருந்து நிலையங்களில் காலை 8:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
புதிதாக கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெறுவதற்காக இருப்பிட சான்றாக குடும்ப அட்டை நகல், வயது சான்று, ஆதார் அட்டை,ஓட்டுனர் உரிமம் ,கல்வி சான்று ,வாக்காளர் அட்டையில் ஏதேனும் ஒன்றின் நகல், 2 வண்ண பாஸ்போர்ட் புகைப்படங்களை அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் சமர்ப்பித்து ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின் அசலையும் கையில் வைத்திருக்க வேண்டும், என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள் தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அட்டையை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.