தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அப்படி அனுப்பும் மசோதாக்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைப்பதையே வழக்கமாக கொண்டு உள்ளார். இதுபற்றி அவரிடம் நினைவூட்டல் கடிதங்கள் எழுதினாலும் அவர் கண்டுகொள்வதில்லை. எனவே தமிழக அரசின் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், கிடப்பில் போட்டு உள்ள ரவியை கண்டித்தும் இன்று தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்து படித்தார்.
கவர்னருக்கு எதிராக 2வது முறை இந்த தீர்மானத்தை கொண்டு வருகிறேன். கவர்னர் பற்றற்ற அடையாளம் உள்ளவராக இருக்க வேண்டும். ஆனால் ரவி ஒரு அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறது. அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு கவர்னர் செல்பட வேண்டும் என அம்பேத்கர் கூறினார்.
அரசுக்கும், மக்களுக்கும் வழிகாட்டுபவராக கவர்னர் இருக்க வேண்டும். ஆனால் ரவி செயல்பாடு வழிகாட்டுபவராக இல்லை. கவர்னர் என்ற நிலையை தாண்டி அரசியல்வாதியாக பேசுகிறார். தமிழக அரசுக்கு எதிராக பேசுவதை நோக்கமாக கொண்டு உள்ளாார் கவர்னர். வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக கவர்னர் செயல்படுகிறார். அரசுக்கு எதிரான கவர்னின் செயல்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். கவர்னருக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றம் ஆக்க விரும்பவில்லை. கவர்னர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.
இவ்வாறு பேசினார்.
தீர்மான விவரம்:
சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட காலத்தை வரையறை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும், குடியரசு தலைவரையும் கேட்டுக்கொள்கிறோம். பேரவை நிறைவேற்றும் தீர்மானத்துக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசும், குடியரசு தலைவரும் கவர்னர்களுக்கு உடனடியாக அறிவுரை வழங்க வேண்டும் என தீர்மானத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி தலைவர்கள் பேசினர். முன்னதாக அவை முன்னவர் துரைமுருகன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.இந்த தீர்மானத்துக்கு குரல் வாக்கெடுப்பு மற்றும் எண்ணி கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக அதிமுகவினர் துணைத்தலைவர் பதவியை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லைஎன காரணம் காட்டி வெளிநடப்பு செய்து விட்டனர். எனவே சபையில் திமுக, அதன் கூட்டணி கட்சி, பாஜக உறுப்பினர்கள் 2 பேர் என மொதத்தம் 144 பேர் இருந்தனர்.
இந்த நிலையில் பேரவையின் கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது. சபையில் இருந்த உறுப்பினர்கள் பெயர்கள் வாசிக்கப்பட்டபோது அவர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தனர். இவ்வாறாக 144 பேர் ஆதரவு அளித்தனர். அதைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.