தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் 94ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மார்ச் 27ஆம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. கடந்த 4-ம் தேதி காலை விஷேச பூஜைகளுடன் 30க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் மங்கள வாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம் தொடங்கியது.
கடந்த ஐந்து தினங்களாக ஆடுதுறை பகுதி முழுவதும் சென்று ஆலயம் திரும்பிய மதுர காளியம்மனின் இறுதி கட்ட நடனத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடுதுறை – திருநீலக்குடி சாலையில் இருபுறமும் திரண்டு நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ரயில்வே சாலை சித்தி விநாயகர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மதுர காளியின் நடனம், குறிப்பாக அம்மனின் மகுடி இசைக்கு ஆடிய ஆட்டம் அனைவரையும் பக்தியில் மெய்சிலிர்க்க வைத்தது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வருகிற 14-ஆம் தேதி அம்பாள் ஊஞ்சல் உற்சவமும் 16ஆம் தேதி ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து அழகு காவடிகளுடன் 1008 பால்குடம் ஊர்வலமும் நடக்கிறது புகழ்பெற்ற ஆடுதுறை மதுர காளியம்மன் கோவில் 94 ஆம் ஆண்டு திரு நடன உற்சவ நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.